Friday, August 12, 2011

ஒரு பனைமரத்தின் ஏக்கம்

முன்னுரை; ஒரு காலத்தில் தமிழகத்தின் மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரின் வாழ்வாதாரமாக பயன் தந்து கற்பக விருட்சகமாக இருந்து வந்த நான் வருங்காலத்தில் ஏறெடுத்துப் பார்க்கவும் நாதியின்றி போய்விடுவேனோ என்ற ஏக்க பெருமூச்சுடன் என் கதையை கூறுகிறேன்.

வாழ்விடம்; ஐவகை நிலங்களில் நெய்தல் நிலத்தில் அதிகமாக காணப்படுவேன், கடலோரத்தில் உள்ள மணற்பாங்கான பகுதிகள் நான் வளர்வதற்கு ஏற்ற சூழல் உள்ளதால் அங்கு அதிகமாக காணப்படுவேன்.எனக்கு வேலி போட்டு நீர் ஊற்றி வளர்க்கத் தேவையில்லை. மழைகாலத்தில் பனங்கொட்டைகளை மணலில் புதைத்து வைத்தால் வளர்ந்துவிடுவேன்.எனது வளர்ச்சி என்பது மிகவும் மெதுவாக இருக்கும். பலன் கிடைக்க குறைந்தது 15 முதல் 20 வருடங்கள் ஆகும்.

ஆண் பனை: ஆண் பனையில் பாளை வெளிவரும், பனையேறிகள் பதநீர் இறக்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பனைஒலை மட்டைகளை சுத்தம் செய்து பாளையை நெட் எடுத்த பிறகு ஆண்பனைக்கென்றுள்ள கட்டுப்பாளை கடுப்பை வைத்து இடுக்கி கடுப்பெடுக்க வேண்டும். கடுப்பெடுக்கும்போது பாளையை வளைத்து பதநீர் கலையத்தில் வடியும்படி ஓடு வைக்கவேண்டும்.முதல்நாள் சும்மா பாளையை சீவவேண்டும் இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து பாளை சீவி இடுக்கி வரவேண்டும், மூன்றாம் நாள் பதநீர் வடிகிறதா எனப்பார்த்து கலயம் கட்ட வேண்டும். ஆண்பனையில் அலவிரல்மீறி வந்தால் (பாளை முற்றி வருவது) அலவு கடுப்பை பயன்படுத்தி பாலை இடுக்கவேண்டும். இதில் தைமாதம் பாளைசீவி இடுக்கினால் ஆறுமாதங்கள் பதநீர் கிடைக்கும், ஆடிமாதம் காற்றடிக்கும் போது பாளைவற்றிவிடும்.பனை வலுவாக இருந்தால் காவோலை விழுகாது, வழுவிழந்தமரத்திலிருந்துதான் காவோலை விழுகும்.

பெண்பனை: பெண் பனையில் நுங்கு கும்பல் சித்திரையில் விடும், இதிலும் பதநீர் இறக்கலாம்,பனைக்குறும்பல்விடும் பொழுது அந்தப்பாளையை பருவப்பனைகடுப்பைவைத்து இடுக்கி பாளைசீவி பதநீர் எடுக்கலாம், இதில் ஆவணிமாதம் வரை பதநீர் எடுக்கலாம் பெண்பனையில் நுங்கு கிடைக்கும்,நுங்கு குரும்பல் சித்திரையில் விடும் 20 நாட்களில் குடிநுங்கு கிடைக்கும், 45-50 நாட்களில் நுங்கு முற்றி பனம்பழம் ஆகிவிடும், ஆவணி புரட்டாசி மாதங்களில் பனங்கொட்டைகளைபூமியில் புதைத்தால் 3 மாதங்களில் பனங்கிழங்கு கிடைக்கும். 100 கிழங்கு 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை வியாபாரியிடம் விற்பனை செய்யப்படுகிறது.

பதநீர் இறக்கும் முறை:பனையேறி தன் இடுப்பில், இடுக்கி அருவாப்பெட்டியை கட்டிக்கொள்வார், அந்தப்பெட்டியில் பாளை சீவும் அருவாள்,சுண்ணாம்பு பொடி இருக்கும். தரையிலிருந்து பனையேற முருக்குத் தடியை பயன்படுத்துவார்கள், கலயத்தில் சுண்ணம்புதடவினால் இனிப்புள்ள பதநீர் கிடைக்கும், கலயத்தில் சுண்ணம்புதடவவில்லை எனில் கள்ளுபதநீர் கிடைக்கும்,அரசு கள்ளு இறக்க தடைவிதித்திருப்பதால் கருப்பட்டி தயார்செய்ய தெரிந்தவர்கள் மட்டுமே இத்தொழிலை தொடர்ந்து செய்தனர்.இதனாலும் இத்தொழில் நலிவடைவதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

கருப்பட்டி தயாரிக்கும் விதம்: பதநீர் இறக்கி வந்தவுடன் பனையேறி குடும்பத்தில் உள்ள பெண்கள் ஒரு பெரிய வாய் அகனற அண்டாவில் ஊற்றி அதற்கென்று உருவாக்கியுள்ள பெரிய அடுப்பில் வைத்து நெருப்பு கெடாமல் எறிக்கவேண்டும், அதே சமயம் பதநீரை நீண்ட துடுப்பால் கிண்டி விடவேண்டும், பதநீர் கொழகொழப்பான கூபதநீரான பதத்திற்கு வந்தவுடன், கூபதநீரை தண்ணீரில் விட்டு கையில் எடுத்து உருட்டினால் கையில் ஒட்டாது, இதை தேங்காய் சிரட்டையில் ஊற்றி 15 நிமிடங்களில் சிரட்டையை கவிழ்த்தால் சிரட்டையின் வடிவத்திற்கு

தகுந்தாற் போல் கருப்பட்டி கிடைக்கும். கூபதநீரிலிருந்து பனங்கற்கண்டும் தயார் செய்யலாம்.

பனையேறியின் சவால் : 12 வயதிலிருந்து பனையேறி பழகினால்தான் இத்தொழிலை செய்யமுடியும், பனையேறி பாலை இடுக்கி பதநீர் இறக்க ஆரம்பித்துவிட்டால், பனை பாட்டம் எடுத்து சொந்த ஊரிலிருந்து இடப்பெயர்ச்சியாகி பனங்காட்டிற்கு சென்றுவிடுவர்,கணவன், மனைவி இருவருக்கும் ஓய்வில்லாத வேலை, ஒரு நாளைக்கு 4 மணி நேரம் கூட தூங்க முடியாது, 1 நபர் குறைந்தது 30 லிருந்து 40 பனைவரை தொழில் செய்வர், ஒவ்வொரு பனையிலும் ஒரு நாளைக்கு 3 முறை பாலை சீவ வேண்டும், காலை ஒரு வேளை மட்டும் பதநீர் இறக்கவேண்டும், ஒருமுறை பாலை சீவாவிட்டாலும் அந்தப்பாலையில் பதநீர் வடியாது, மீண்டும் அந்தப்பாலையை வெட்டிவிட்டு, வேறு பாலையை இடுக்கி பதநீர் எடுக்க குறைந்தது 7 நாளிலிருந்து 10 நாட்கள் செல்லும், அதுவும் முதலில்கிடைத்த அள்வே கிடைக்கும் என்று உறுதி கூற முடியாது, அதனால் அவர்கள் எந்த ஒரு நல்ல, கெட்ட, நிகழ்வுகளுக்கும் செல்லமுடிவதில்லை, நோய்வாய்ப்பட்டாலோ, விபத்து ஏற்பட்டாலோ, அத்துடன் தொழில் முடிந்துவிடும்.காலை 4 மணிக்கே எழுந்து பனையேறி தொழிலுக்குச் சென்றுவிடுவார், அப்பொழுதே அவர் மனைவி எழுந்து வீட்டுவேலைகளையும், காலை உணவையும் முடித்துக்கொண்டு குழந்தைகளை பராமரித்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கணவனுக்கு குடிநீர், நீராகாரம் கொண்டுபோய் கொடுத்துவிட்டு, அதுவரை இறக்கியுள்ள பதநீரை எடுத்து வந்து காய்ச்ச ஆரம்பிப்பர், அதனை தொடர்ந்து கணவர் கொண்டுவரும் பதநீரை ஊற்றி காய்ச்சி கருப்பட்டி தயாரித்து முடித்தவுடன், மறுநாளைக்கு தேவையான எரிபொருள்சேகரிக்கச் சென்றுவிடுவர். இந்தப்பணியில் ஈடுபட்டிருக்கும்போது ஆண்கள் இடுப்பில் கச்சை மட்டும் தார்பாய்ச்சி கட்டியிருப்பர், பெண்கள் பழைய கந்த சேலையை உடுத்தி இருப்பர், பதநீர் காய்ச்சும் இடத்தில் பெண்களையும் குழந்தைகளையும் பார்த்தால்

உடம்பு, உடை அனைத்தும் கரியாக காட்சி தருவார்கள், வியாபாரிகளிடம்

கடனபட்டிருப்பதாலும்,பொருளாதார பற்றாக்குறையினாலும், இவர்கள் தயாரிக்கும் பொருட்களை இருப்பு வைக்கமுடியாமல், குறைந்த விலைக்கு வியாபாரிகளிடமே, உடனுக்குடன் விற்றுவிடுகிறார்கள். ஆறுமாதகாலங்கள் மட்டுமே இத்தொழில் செய்வர், மற்ற காலங்களில் மாற்றுத்தொழிலாக மீன்பிடி, மரம் வெட்டுதல் போன்ற கூலி வேலைகளுக்கு செல்கிறர்கள்.ஒரளவு படித்த இளைஞர்கள் கெளரவமான வேலைக்காக வெளியில் சென்று விட்ட்தாலும், இளைய தலைமுறையினர் இத்தொழிலை பழகிக்கொள்ளாததாலும், பனையேறிக்கு பெண்கொடுக்கக்கூட சமுதாயத்தில் யாரும் விருப்பப்படாததாலும், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்காததாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இத்தொழிலில் ஈடுபடுத்த விரும்பவில்லை,குழந்தைகளும் நன்கு படித்து நாகரீகமாக வாழவே விரும்புகிறார்கள், இன்றைய தலைமுறையினருடன் பதநீர் இறக்கும் தொழில் முடிந்துவிடும்.மீண்டும் இத்தொழிலை புதுப்பிக்கவேண்டுமானால் ஏதாவது தொழில்நுட்பக்கல்லூரியில் பட்டயம் வாங்கித்தான் செய்யவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படலாம், நலிந்துவரும் இத்தொழிலை மேம்படுத்த அரசுகூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பனைமரத்தின் பயன்கள்;பனைமரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் பயன் நிறைந்தது.முற்றிய பனைமரம் தண்டுபகுதி வீடுகட்ட உதவும், பனைஒலை வீட்டின் மேற்கூரைவேய்வதற்கும், கருப்பட்டி கொட்டான்தயாரிக்கவும், ஓலைப்பாய் மீன், கருவாடு பேக்கிங் செய்யவும் பயன்படுகிறது, குருத்தோலையிலிருந்து பெட்டிகள், அலங்கார தோரணங்கள் செய்யவும், பனைநார் கட்டில்பின்னவும் மற்றும் நார் பெட்டிகள் முடைவதற்கும்,பனைமட்டைகள் வேலிகட்டுவதற்கும் பயன்படுகிறது. பனையிலிருந்து கிடைக்கக்கூடிய பதநீர், நுங்கு வேனிற்காலத்தில் குடிப்பதற்கு கிடைக்கும், இது உடல் சூட்டை தணிக்கக்கூடியது.பனங்கிழங்கு சிறந்த நார்சத்துள்ள உணவாக பயன்படுகிறது.பனைமரத்திலுள்ள பாளைகள், நுங்கு குரும்பல் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு உணவாகபயன்படுகிறது.வீட்டிலிருக்கும் பெண்கள் பனை ஓலையிலிருந்து, அலங்காரப்விளையாட்டுப்பொருட்கள், ஒலைவிசிறி, தொப்பி,மற்றும் பனம்பழத்திலிருந்து சாறு எடுத்து பினாட்டு எனும் திண்பண்டம் செய்கிறார்கள்.பனை மட்டையிலிருந்து தும்பு தயாரிக்கிறார்கள், கூரை வீட்டிற்கு வெயில் காலத்திற்கு ஏ.சி. தேவையில்லை,பனி காலத்தில் குளிராது. இதுபோல் பனையின் அனைத்துபாகங்களும்பயனுள்ளது.

முடிவுரை: பனையேறிகளுக்கு பாதுகாப்பில்லாத்தாலும், அரசு திட்டங்கள் எதுவும் அவர்களுக்கு பயனளிக்கு வித்த்தில் இல்லாத்தாலும், சமூக அந்தஸ்து இல்லாத்தாலும், நுகர்வு கலாச்சாரத்தின் தாக்கம்,பன்னாட்டு நிறுவன்ங்களின் குளிர்பான்ங்களின் வருகை, மற்றும் அயல்நாட்டு செயற்கை மதுபானங்களுக்கு அரசு முன்னுரிமை கொடுத்து குறைந்தவிலையில் இயற்கையில் கிடைக்கும் கள்ளுக்கு அரசு தடை விதிதத்து, பருவநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகள் பனைத்தொழில் நலிவடைவதற்கு முக்கிய காரணிகளாக உள்ளது. இந்த நிலையை மாற்றி இயற்கையுடன் இணைந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

நன்றியுடன் பனைமரம்.

தகவல் தொகுப்பு நா. அமராவதி

புகைப்படம்ம் . வினோத்.